தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இளைஞராஜா முன்னுரை எழுதிய “மோடியும் அம்பேத்கரும்” என்ற ஆங்கிலத்தில் புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், பேராசிரியர் காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் நான் லண்டனுக்கு சென்றிருந்தேன். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவம் மற்றும் கல்விசார்ந்த அந்த பயிற்சி கூட்டத்தில் இந்தியாவில் இருந்து 30 பேராசிரியர்கள் சென்றிருந்தோம். அந்த 2 வார காலத்தில் குஜராத் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் என்னிடம் பேசினார். அவர் என்னிடம் அம்பேத்கர் அருங்காட்சியகத்துக்கு வர அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிரா அரசு அதை உருவாக்கியது. நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், அப்போது அது மூடப்பட்டு இருந்தது. அந்த பேராசிரியர் அதனால் அதிருப்தி அடைந்தார். வேறு வழியில்லாமல் அந்த அருங்காட்சியகத்துக்கு முன் அவர் கோயிலில் வழிபடுவதைபோல் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் மீது மக்கள் எவ்வளவு மரியாதை தருகிறார்கள் என்பதற்கு இது உதாரணம்.

இந்த புத்தகம் அம்பேத்கரின் கொள்கைகளுடன் புதிய இந்தியாவின் வளர்ச்சி எப்படி ஒன்றிணைகிறது என்பதை காட்டுகிறது. உள்கட்டமைப்பு, கல்வி, சமூக பொருளாதார இயக்கம், பாலியல் சமத்துவம், சுய சார்பு என 12 பகுதிகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நம்பிக்கை, பெருந்தன்மை, ஊக்கம், அறிவு ஆகிய 4 முக்கிய அம்சங்கள் ஒரு வெற்றிகரமான தலைவராக இருக்க தேவை. உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும், இந்தியாவில் தற்போது இருக்கும் தலைவர் ஜி20 தலைமையை ஏற்று நாட்டுக்கு பெருமையை தேடித்தந்து இருக்கிறார். “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்று அறிவித்து அம்பேத்கரின் சமத்துவ கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலித்து உள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற நமது பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நமது மாணவர்களிடம் பேசியதற்காக அவருக்கு நன்றியுடன் இருக்கும். கல்வி என்பதன் நோக்கம் மக்களை ஒழுக்கமாகவும் சமூகமயமாக்கவும் செய்யும் என்று அம்பேத்கர் தெரிவித்தார். கல்வி என்பது நம்மை சுயசார்புடையவராகவும், சுய மரியாதையுடனும் சமூகத்தில் வாழ வைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாம் சீர்திருத்தவாதியான அம்பேத்கர் பற்றியும் செயல்படுத்துபவரான மோடியை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். இருவரும் அரசியல் கடந்து பல துறைகளில் சாதித்து உள்ளனர். அம்பேத்கரின் கொள்கைகளை மோடி செயல்படுத்தி வருகிறார். சுயசார்பு இந்தியா, இந்தியா முதல் ஆகிய அம்பேத்கரின் 2 கனவுகளை மோடி செயல்படுத்துகிறார். இந்தியா விஸ்வ குருவாக மாறி அதன் கலாச்சார பெருமைகளை உலகின் அனைத்து நாடுகளுக்கும் காட்டும். இந்தியா தலைமை ஏற்பதற்கான காலம் இது. ஒன்றாக செல்வோம். ஒன்றாக வளர்வோம். வாழிய செந்தமிழ். வாழ்க பாரதம். வாழ்க வையகம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ் பதிப்பு புத்தகங்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டு, பேசியதாவது:-

சமுதாய பாகுபாட்டை போக்க நாம் என்ன செய்துள்ளோம்? சமூகநீதி பற்றி பரவலாக பேசி வருகிறோம். ஆனால் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதும், கோவிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பதும், அங்கன்வாடியில் தரையில் அமரவைப்பதுமான நிகழ்வுகளும் நடக்கின்றன. இதுதான் சமூகநீதியா?. தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் தமிழ்நாட்டில் தொடருகிறது. இத்தகைய கொடுமைகள் இருக்கும் நேரத்திலும் சமூகநீதியை பேசிக்கொண்டிருக்கிறோம். தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. வறுமை, பசி, தீண்டாமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்தியாவை ஒரே குடும்பமாக மோடி பார்த்ததால், இன்று இந்தியா பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்களை கண்டுள்ளது.

“பாரத் மாதா” என்பது அரசியல் வசனம் இல்லை. அது உணர்வுபூர்வமானது. இந்தியா என்பது ஒரே குடும்பம். இந்தியா முழுமைக்கும், அனைவருக்குமான வளர்ச்சியை மோடி தந்துகொண்டிருக்கிறார். பணம் படைத்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் சுகாதார சேவை கிடைத்து வருகிறது. என்ன மாடல் என்றே தெரியாமல் சிலர் பல மாடல்களை சொல்லி கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்திலும் அடிப்படை கட்டமைப்பை மோடி மாற்றிக்காட்டியிருக்கிறார். இந்தியாவில் இப்போது உருவாகியிருக்கும் மாற்றம், எழுச்சி உலக நாடுகளின் வரிசையிலும் முக்கிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது. 1 பில்லியன் டாலர் செலவில் ஹம்பன் தோட்டா துறைமுகத்தை இலங்கையில் சீனா கட்டமைத்தது. ஆனால், இன்று அந்த துறைமுகம் முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. ஆனால் இந்தியாவோ இலங்கையில் மருத்துவமனைகள், சாலைகள், வீடுகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளது. இது தான் இந்தியாவின் மாடல். அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் மோடி என்று சொல்வதில் எனக்கு துளியும் தயக்கமில்லை. முத்தலாக் முறையை நீக்கி முஸ்லிம் சகோதரிகளுக்கு தீர்வு கண்டவரும் மோடிதான். மோடி அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரே குடும்பம் என்பதில் உள்ளது. நேர்மறை எண்ணத்தை பரவலாக்குவோம். எதிர்மறை எண்ணங்களை விட்டொழிப்போம். நம் தேர்வு நேர்மறையா? எதிர்மறையா? என்பதை நாம்தான் முடிவு எடுக்க வேண்டும். உலகத்தையே ஒரே குடும்பமாக கருதி, பாதுகாப்பாக வழிநடத்தும் திறன் உடையவர்தான் மோடி. அனைவரும் இந்த புத்தகங்களை படிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.