கோவை அடுத்துள்ள சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இளைஞர்கள் இளைஞர்கள் பிழைப்பு தேடித் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கிப் பல பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் வட மாநிலத்தவர் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வடமாநிலங்களைக் காட்டிலும் இங்கு வேலை வாய்ப்பு அதிகம். மேலும், அங்குடன் ஒப்பிடுகையில் இங்கு ஊதியமும் அதிகம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதேநேரம், இப்படி அதிகப்படியான வடமாநிலத்தவர் வருகை காரணமாகவே தமிழர்களுக்கு போதிய வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், வட மாநிலத்தவர் குறித்த தகவல்கள் முறையாக இல்லாத நிலையில், அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளையிலும் வடமாநில கொள்ளையர்கள் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியிருந்தனர்.
இதற்கிடையே கோவையில் நடந்துள்ள ஒரு பரபர சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உருட்டுக்கட்டைகளுடன் வடமாநிலத்தவர்கள் உள்ளே புகுந்த காட்சிகள் தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கேண்டினில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாப்பிட்டு வருகிறார்கள். அங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் 15 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே நேற்றிரவு கேண்டினில் பணிபுரியும் அந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதல் இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் மோதிக் கொண்ட சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விகாரம் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாகப் புகார் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.