பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சர்வே நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் இன்று திடீர் சர்வே நடத்தினர். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரத்தை ஆவணப்படமாக எடுத்து பிபிசி வெளியிட்டிருந்த நிலையில் இந்த திடீர் சர்வே அந்நிறுவனத்தை அச்சுறுத்துவே, என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு எதிராக ”எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு” கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிபிசி இந்தியா அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சர்வே குறித்து எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா வருந்துகிறது. செய்திகளில் வந்த தகவலின்படி, புதுடெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை மற்றும் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் தற்போதைய நிலை குறித்து பிபிசி இரண்டு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதற்கு பிறகு இந்த சர்வே நடத்தப்படுகிறது.
இந்த ஆவணப்படங்கள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசாங்கம் பிபிசிகு எதிரான விமர்சனங்களை வைத்தது. மேலும், அந்த ஆவணப்படங்களை ஆன்லைனில் இருந்து நீக்கியத்துடன் திரையிடவும் தடை செய்ய முயற்சித்தது. அதன் தொடர்ச்சியாக பிபிசி அலுலவகத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய கணக்கெடுப்பானது அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டும் தொடர்ச்சியான போக்காகும்.
இதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் ‘NewsClick’ மற்றும் ‘Newslaundry’ அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். ஜூன் 2021 இல், ‘Dainik Bhaskar’ மற்றும் ‘Bharat Samachar’ எதிராக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த அனைத்து சோதனைகளுக்கு பின்னணியிலும் அரசுக்கு எதிராக விமர்சனங்களே உள்ளன. வருமானவரித் துறையின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் போக்கு. அரசின் விசாரணைகள் எந்த விதத்திலும் பத்திரிகை நிறுவனம் மற்றும் பத்திரிகையாளரின் உரிமையை குலைக்கும்படியாக இருக்கக்கூடாது. வருமானவரித்துறையினரின் இத்தகைய விசாரணைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிகளுக்குள் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.