ஆந்திரா போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000க உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அதேபோல் மாற்றத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனசாட்சியற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும். பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.