கர்நாடகா அரசின் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மீனவர் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாலாறு வழியான தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே அடிப்பாலாறு எனப்படும் பாலாறு நதி ஓடுகிறது. காவிரி நதியுடன் பாலாறு சங்கமிக்கக் கூடிய இடம் இது. பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் கர்நாடகா வனத்துறையினரோ தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பாலாற்றில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர் பழனி என்பவர் மீது கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பழனி உயிரிழந்தார். இதனால் கொந்தளித்த எல்லைப் பகுதி மக்கள் கர்நாடகாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் போது கர்நாடகா வாகனங்கள் தாக்கப்பட்டன. கர்நாடகா சோதனை சாவடி,வாகனங்கள் தீக்கிரையாக்கபட்டன.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கர்நாடகா வனத்துறையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொளத்தூர் காரைக்காடு ராஜா, செட்டிப்பட்டி ரவி, இளையபெருமாள் ஆகியோர் பாலாற்றில் பரிசலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கர்நாடகா வனத்துறையினர் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தப்பி ஓடினர். ரவியும் இளையபெருமாளும் வீடு வந்து சேர்ந்த நிலையில் ராஜா மட்டும் காணவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ராஜாவின் உடல் இன்று பாலாற்று கரையில் ஒதுங்கியது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். கர்நாடகாவின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழ்நாட்டு மீனவர் ராஜா பலியான சம்பவம் எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பாலாறு வழியாக தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்கள் மான் வேட்டையாடினர்; அதனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என ஒரு பொய்யை கர்நாடகா அவிழ்த்துவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் பெரும் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது.