சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், அவரது மனைவியை மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1991ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண். முறுக்கிய மீசை, முரட்டு உடற்கட்டு. ஆனால் பாசத்தில் பச்சை குழந்தை என வித்தியாசமான ஹீரோ மெட்டீரியலாக வலம் வந்த ராஜ்கிரண், அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். சண்டைக் காட்சிகளில் தனி முத்திரைப் பதித்த ராஜ்கிரண், அப்போது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், இயக்குநர் என மாஸ் காட்டி வந்த ராஜ்கிரண், கடந்த சில வருடங்களாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். நந்தா, சண்டைக்கோழி, முனி, கொம்பன், ரஜினி முருகன், பவர் பாண்டி, விருமன் போன்ற படங்களில் தனது கெத்தான நடிப்பால் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு அவரது குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சினைகள் எழுந்தன. ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவும் சீரியல் நடிகர் முனீஸ்ராஜும் ரெஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அவர், எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத் தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, பிரியாவை “வளர்ப்பு மகள்” என்று யாரிடமும் அறிமுகப்படுத்தியது கிடையாது என விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து ராஜ்கிரணின் தூண்டுதலின் பேரில் தன் மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை மோசமாக பேசி வருவதாக வளர்ப்பு மகள் கண்ணீர் மல்க கூறியிருந்தார். திரையுலகில் இந்தப் பிரச்சினை பரபரப்பான நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் ராஜ்கிரண் வீடு புகுந்து மிரட்டியுள்ளனர்.
ராஜ்கிரண் வீட்டில் இல்லாத நேரம் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ராஜ்கிரணின் மனைவி கதீஜாவிடம் அவரை எங்கே கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், ராஜ்கிரணின் மனைவியை அந்த மர்ம நபர்கள் கடுமையாக மிரட்டியும் உள்ளனர். அதன்பின்னர் வீட்டில் இருந்து கிளம்பும்போது, “நீங்கள் இந்து விரோதி.. முஸ்லீம் விரோதி” என மர்ம நபர்கள் கோஷமிட்டு கொண்டே சென்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நடிகர் ராஜ்கிரண், வீடு திரும்பியதும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து தற்போது போலீசாரும் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.