கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவி சமூக பொருளாதார இழப்பை அதிகளவில் ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சுமார் மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவியது.இதனையடுத்து கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டது. இதன் பின்னர் தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னரே, படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் குறைக்கப்பட்டன. தற்போது சுமூக சூழல் நிலவி வருகிறது.
2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது கொரோனா பரவல் அதிகரித்திருந்த சூழலில், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழியாக பார்க்கப்பட்டது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் இருந்தனர். இதனால் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.