எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக செல்ல வேண்டும், அவரிடம் கோபத்தை காட்டாதீர் என முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு சொன்னதால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்க வேண்டும், முதல்வர் பேச்சை கேட்காத சிலரும் இருக்கக் கூடும் என கனிமொழி எம்பி பிரச்சாரத்தில் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் கடந்த வியாழக்கிழமை பிரச்சாரம் செய்த போது, மீசை வைத்த, வேட்டி கட்டிய ஆம்பளையா என முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை பலரும் கண்டித்தனர். இந்தப் பேச்சுக்கு அங்கு முகாமிட்டுள்ள அமைச்சர்களும் திமுக நிர்வாகிகளும் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் அமைதி காக்குமாறு தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து எம்பி கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நான் எப்போதும் மரியாதையாகவே பேசுவேன். தரக்குறைவாக யாரையும் விமர்சனம் செய்யமாட்டேன். ஏனென்றால், கருணாநிதி இருந்த பதவியில் சில நாட்கள் எடப்பாடி பழனிசாமி ஒட்டி கொண்டு இருந்தார். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம், தோல்வி என்பது தெரிந்தவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு நடுக்கம் வந்துவிட்டது. இப்போது இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள். ஆனால் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் திமுகவின் உடன்பிறப்புகள். இந்த பதவியை இரண்டு நிமிடங்ளில் தூக்கி எறிந்து விடுவார்கள். அனைத்திற்கும் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருப்பார்கள்.
அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் இவர்கள் எல்லாம் கோபக்காரர்கள். அமைச்சர் நேருவின் கோபம் குறித்து கலைஞர் ஒரு முறை கூறியிருந்தார். எனவே இவர்களை எல்லாம் சீண்டிப்பார்க்காதீர்கள். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) பத்திரமாக அங்கிருந்து செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சொல்லியுள்ளார். அதனால் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடலாம் என நினைக்காதீர்கள். அவருக்கும் கட்டுப்பாடாத சில பேர் இருக்கக் கூடும். அதனால் நீங்கள் தயவு செய்து உங்கள் வார்த்தைகளை எண்ணி பேசுங்கள். நாவடக்கம் தேவை. அது இல்லை என்றால் உங்களுக்கு நாவடக்கம் என்றால் என்ன என்பதை திமுக சொல்லும் என கனிமொழி தெரிவித்தார்.