ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலர், முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். வழக்குரைஞர் பாபுமுருகவேல் உடன் இருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர்போல் ஆளுங்கட்சியினர் செலவழிக்கின்றனர். வாக்காளர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை. நாக் அவுட் ஆகிவிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்து, மூன்று நேரமும் சாப்பாடு, பிரியாணி, பணம் என கொடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் வாக்காளர்களை சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களை மனம் மாற்றம் செய்யும் வேலைகளில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். கேலிக்கூத்தான, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ரூம் போட்டு சிந்திப்பதில் கில்லாடி. அவரைப் போல புதுப்புது ஐடியாக்களை யோசிக்கும் அமைச்சர் உலகத்திலேயே இருக்க முடியாது. எந்த இடைத்தேர்தலிலும் செயல்படுத்தாத ஒரு முறையை இந்த இடைத்தேர்தலில் செயல்படுத்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் 32 – 40 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை அந்தந்த டாஸ்மாக் பொறுப்பாளர் அன்றைக்கே வங்கியில் செலுத்த வேண்டும். தேர்தல் அது டாஸ்மாக் நிறுவனத்திற்குச் செல்லவேண்டும். ஆனால், அந்த தொகையை தினந்தோறும் ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சரின் ஆள் ஒருவர் சென்று வசூல் செய்து, அந்த பகுதியிலேயே அந்தப் பணத்தை வாக்காளர்களுக்கு பயன்படுத்துவதற்காக வைத்துக் கொள்வார்கள். அதற்குப் பதிலாக, தொகுதிக்கு வெளியே இருந்து அந்தப் பணம் வங்கிக்கு அனுப்பப்பட்டு விடும். இப்படி தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு கில்லாடிகளாக இன்று வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்.
என்னதான், வாக்காளர்களுக்கு திமுக பணத்தை இறைத்தாலும், வாக்காளர்களின் மனம் அதிமுகவை நோக்கியே இருக்கும். திமுக ஆட்சிக்கு எதிரான அலை ஈரோடு கிழக்கு தொகுதியிலும், தமிழ்நாடு முழுக்கவும் இருக்கிறது. இந்நிலையில், மக்களை ஏமாற்ற திமுகவினர் குறுக்கு வழியை கடைபிடித்து வருகிறார்கள். அது வெற்றி பெறாது என்றார்.
சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் மாதம் முப்பெரும் விழா நடத்த முடிவெடுத்துள்ள ஓபிஎஸ் அணி, மார்ச் மாதம் விடியல் பிறக்கும் எனத் தெரிவித்தது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “கூடுவார் கூட சேர்ந்தால் அந்தக் காற்று தான் அடிக்கும் என்று சொல்வார்கள். விடியல் அரசு எனச் சொல்லும் திமுகவோடு சேர்வதால், இவர்களும் விடியல் நடக்கும் என்கிறார்கள். ஓபிஎஸ் திமுகவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இப்போது ஆட்டக் களத்திலேயே இல்லை, அவர் நாக் அவுட் ஆகிவிட்டார். அவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை” என்று கூறினார்.
மேலும், நேற்று மநீம தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, “விஸ்வரூபம் படத்தின் போது என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். அப்போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கலைஞர் கருணாநிதி பயப்படாதே என்றார். ‘உதவி வேண்டுமா’ எனக் கேட்டார். ‘இது நாட்டுப் பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என கூறினேன் எனப் பேசினார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து ஜெயக்குமார் பேசுகையில், “விஸ்வரூபம் படத்தில் ஒரு சமூகம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு சமூகத்தினரின் மன உணர்வுகளை புண்படுத்தி பணம் தான் முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், அரசாங்கம் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும். உடனடியாக அந்த காட்சிகளை நீக்குங்கள் என படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காட்சிகளை நீக்கிய பிறகுதான் படம் வெளியிடப்பட்டது. இப்போது இப்படிச் சொல்லும் கமல்ஹாசன், ஜெயலலிதா இருக்கும்போது இதைச் சொல்லி இருக்க வேண்டியது தானே? அப்போது வாயை மூடிக்கொண்டு இருந்தீர்களே? வாயை திறக்க முடியாத அளவுக்கு இப்போதைய திமுக அமைச்சர் சுட்ட போண்டாவை வைத்திருந்தீர்களா? அன்றைக்கு இருந்த நிலையில், ஒரு மதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தாத வகையில் காட்சிகளை நீக்கி, படத்தை வெளியிடச் சொன்னார். அதன்படியே, காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. நடந்தது இதுதான். உண்மையைத் திரித்துப் பேசக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லை. தினந்தோறும் கொலை , கொள்ளை குறித்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த ஆட்சியில் காவல்துறை செயல்படவில்லை. இந்த ஆட்சியில் போலீஸ் மூளை செயல்படவில்லை. அதிமுக ஆட்சியில் காக்கிச்சட்டை போடுவது கெளரவமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏன் காக்கிச் சட்டை போடுகிறோம் என காவல்துறையினர் நினைக்கிறார்கள் என்றார்.