வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற ஆர்பி உதயகுமார் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின், திருமண விழாவின் உற்சாகம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. இந்த நிலையில் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது நடக்கும். வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான். அதிக இளைஞர்கள் இருக்கும் கட்சியும் அதிமுக தான். அதிமுகவின் வீரத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா கோயிலில் வேண்டி இருந்தேன். அது நிறைவேறியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை. மக்களின் ஏழ்மையை மையமாக வைத்து, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக மக்களை கொட்டகையில் அடைத்து வைக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைத்து தரப்புக்கும் புகாரளிக்கப்பட்டுவிட்டது.
வாக்காளர்களை அடைத்து வைப்பது மக்கள் விரோத செயல். அதனை திமுகவினர் செய்து வருகிறார்கள். முதலில் திருமங்கலம் ஃபார்முலா. இன்று இரண்டாவதாக மக்களை அடைத்து வைக்கும் ஃபார்முலாவை உருவாக்கி இருக்கிறார்கள். வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்ததில்லை. மக்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதித்தோம். அதுதான் ஜனநாயகம். ஆனால் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அடைத்து, தேவையானவற்றை செய்து கொடுத்து சாப்பாடு போடுகிறார்கள். ஆனால் மக்கள் வாக்கு மட்டும் அதிமுகவுக்கே போடுவார்கள். வாக்காளர்கள் மீது திமுகவுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் தான் வாக்காளர்களை அடைத்து வைக்கிறார்கள். அதிமுகவுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களை அடைத்து வைப்பதால், கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.