பாமக சார்பில் நடப்பு ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாமக கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிட்டார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும். வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும். வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும். பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும்.
பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டு 2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 2023-24ஆம் ஆண்டு தமிழ்நாடு இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
கடந்த 60 ஆண்டுகளில் பாசனக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 9.03 லட்சம் ஹெக்டேரில் இருந்து 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரி, குளங்கள் மூலமான பாசனப் பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் சுமார் 33% மட்டுமே தற்போது அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக 80 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 2021-22ஆம் ஆண்டில் 43 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,700 விலை வழங்கப்படும். 2023-24 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும்.
தமிழ்நாட்டில் எந்தத் தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது. இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது.
தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயிக்கும். காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும். மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
2023ஆம் ஆண்டு பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அமைப்பால் அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆண்டு முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், சிறுதானிய உணவுத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்தும்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிரந்தர தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, கரும்புக்கு ரூ.1.2 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.33,000, பிற பணப் பயிர்களுக்கு ரூ.1.25 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். இயற்கை சீற்றத்தால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுகட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே நேரடியாக செயல்படுத்தும்.
பயிர்க்காப்பீட்டுக்கான பிரீமியத்தில் 2% மட்டும் உழவர்கள் செலுத்தினால் போதுமானது. மீதத் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதியாக பகிர்ந்து செலுத்தும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மை தவிர்த்த பிற தொழில் திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.