எடப்பாடி பழனிசாமி மோடி பெயரை பிரச்சாரத்தில் பயன்படுத்தாதது ஏன்?: மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இதுவரை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி இருக்கிறாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் கடைசி நாளான இன்று, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று காலை முதலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளிலும் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். இறுதியாக ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அந்தப் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனா என்னும் கொடிய காலம் வந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டோம். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் எந்த உதவிகளையும் செய்யவில்லை. ஆனால் திமுகவினர் மக்களோடு மக்களாக நின்று எப்படியெல்லாம் உதவினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 15% வாக்குறுதிகளை எவ்வளவு வேகமாக நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு வேகமாக நிறைவேற்றுவோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை இன்னும் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி, எதையும் செய்யவில்லை என்று பேசுகிறார்கள். அதை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் விதிக்கு புறம்பானதல்ல அந்த பட்ஜெட்டில், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் எந்தத் தேதியில் இருந்து வழங்கப்படும் என்பதை அறிவிக்க இருக்கிறோம்.

இந்த அறிவிப்பு எப்போது என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். இன்று காலையிலேயே அறிவித்துவிட்டேன். உடனே, தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அதிமுகவினர் புகாரளித்துள்ளார்கள். கேள்வி கேட்டதற்கு தான் பதில் அளித்திருக்கிறோம். இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது அல்ல. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டம் தான் அது. கஜானா காலியாக இல்லையென்றால், எப்போதோ நிறைவேற்றி இருப்போம்.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சிக்கு எடை போட்டு பார்க்கும் தேர்தலாக அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி மட்டும் இல்லை. இந்த கூட்டணி கொள்கை, லட்சியம், மொழி, நாட்டிற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது. நம்மை எதிர்த்து ஒரு கூட்டணி இருக்கிறது. மோடி பெயரை சொல்லி இருக்கிறாரா? அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லாம், பேனரில் போஸ்டரில் போட மாட்டார்கள். அதுதான் அவர்கள் கூட்டணி. இதுவரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி இருக்கிறாரா? அவர்களுக்கு பயம் இருக்கிறது. யார் பெயரை பயன்படுத்தினாலும் டெபாசிட் வாங்கப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.