கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் சுயேச்சைகள் 73 பேர் போட்டியிடுகிறார்களல். இந்த தேர்தலுக்காக 1,430 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த பிரச்சாரத்தில் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் விசாரணை கமிஷன் அறிக்கை நிலையை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தார்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வெளியில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன், அத்தனை பேரையும் பிடித்து சிறையில் அடைப்போம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு ஜெயலலிதா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது, கொடநாடு வழக்கின் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது என்று பேசி இருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு வழக்கு குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் அக்ரஹாரத்தில் தனது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொடநாடு விவகாரத்தை கூறி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் இங்கு நடக்காது. கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்ததே திமுகதான்.
அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர், சாலை வசதிகள், மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனைகளுக்கு புதிய கருவிகள், வணிக வளாகம், தடையில்லா மின்சாரம், பேருந்து நிலைய விரிவாக்கம், மார்க்கெட் என 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து 22 மாதங்கள் கடந்துவிட்டது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு திட்டம் கூட செய்யவில்லை. அதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் 10 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியதால், நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம். ஈரோடு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுமனை பட்டா கொடுத்துள்ளோம் என்கிறார். அதிமுக ஆட்சியில் 24 லட்சம் பட்டா கொடுத்துள்ளோம். முதியோர் உதவித் தொகையும் கொடுத்திருக்கிறோம். அதனை திமுக ஆட்சியில் பலருக்கும் நிறுத்தி இருக்கிறார்கள்.
முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக. உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராமல் இருந்தார்கள். இதனால் 12 மாணவர்களின் உயிர் போய்விட்டது. அனிதா உயிரிழந்த போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எவ்வளவு விமர்சித்தார்கள். இப்போது அனைவரும் அமைதி காக்கிறார்கள். வீதியாக வீதியாக பிரச்சாரம் செய்யும் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து எப்போது என்று சொல்லவே இல்லை.
மக்களை ஏமாற்றி பொய் பேசியவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். தோல்வி என்ற தண்டனையை மக்கள் அளிக்க வேண்டும். அதேபோல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று வாக்குறுதி அளித்தார்கள். மார்ச் மாதம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். கணக்கெடுப்பு நடப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொல்லுகிறார். அத்தனை பொய். ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகிவிட்டது. இருப்பினும் எந்த திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் தான் திமுகவுக்கு மக்கள் நியாபகம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.