காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி, பாஜக மானுட குலத்திற்கே எதிரி: சீமான்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ், பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பரப்புரை முடிவடைந்துள்ளது. இன்று பிரச்சாரத்திற்கான இறுதி நாள் என்பதால் அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது சீமான் பேசியதாவது:-

இடைத்தேர்தல் களத்தில் சிறந்த ஆட்டக்காரர் விருது எங்களுக்குதான் கிடைக்கும். எய்ம்ஸ் பற்றி பேசுவதை விட்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துங்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைந்தாலும் அங்கேயும் வடமாநிலத்தவர்தான் மருத்துவராக இருப்பார். காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களை ஈரோடு கிழக்கு மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

இது இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல் என்கிறார்கள். குக்கர், வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு எல்லாம் கொடுப்பதால் இது எடைத்தேர்தல் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிலத்தை அடமானம் வைப்போம், வீட்டை அடமானம் வைப்போம். தாலியை கூட அடமானம் வைப்போம். ஆனால் தமிழர்கள் நாங்கள் தன்மானத்தை அடமானம் வைக்க மாட்டோம். வெற்று பணத்திற்காக தன் மானம் காக்கும் வாக்கை அடமானம் வைத்து விடாதீர்கள்.

கரும்பை பிழிந்து, கசக்கினாலும் எப்படி இனிப்பான சுவை வருகிறதோ, அதுபோன்று நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். எங்களுக்கு ஒரே கோட்பாடு தான். காங்கிரஸ் எங்கள் இனத்தின் எதிரி, பாஜக மானுட குலத்திற்கே எதிரி. இவ்வாறு அவர் பேசினார்.