துருக்கியைத் தொடர்ந்து ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் ஹொக்கைடோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி குலுங்கியது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நிலைகுலைந்தது. துருக்கி – சிரிய எல்லையை ஒட்டிய நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதைத்தாண்டி ஏராளமானோர் காயங்கள் அடைந்தனர். வானூயர்ந்த பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின. மீட்பு பணிகள் முடிந்து தற்போதுதான் மறுகட்டமைப்பு பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. இருந்தாலும் மற்றொரு பக்கம் நிலநடுக்கம் அவ்வப்போது துருக்கியை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. நேற்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடா தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நெமுரா தீபகற்ப பகுதியில் 61 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஹொக்கைடா மாகாணத்தில் கடந்த திங்கள் கிழமைதான் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அதேபோல், காயம் எதுவும் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.