அருணாசலபிரதேசம் முதல் குஜராத் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை!

வரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபடுவோம் என காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டது. அருணாசலபிரதேசம் முதல் குஜராத் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை முடிந்த சூட்டோடு சூடாக, காங்கிரஸ் கட்சி தனது அகில இந்திய மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாடு, சத்தீஸ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் உள்ள ராஜ்யோத்சவ் ஸ்தலத்தில் கடந்த 24-ந் தேதியன்று கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. முதலில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில், காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பேசினார்கள்.

முடிவில் கட்சித்தலைவர் கார்கே நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர், “காங்கிரஸ் மாநாடு வேண்டுமானால் முடியலாம். ஆனால் அது புதிய காங்கிரசின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இன்றைக்கு நம் முன்னால் நிறைய சவால்கள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியால் கையாள முடியாதது என எதுவும் இல்லை. நமக்கு இப்போது தேவைப்படுவது ஒற்றுமை, ஒழுக்கம், உறுதி. கட்சியின் வலிமையில்தான் நமது வலிமை உள்ளது” என கூறினார்.

இந்த மாநாட்டில், வரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபடுவோம் என்று அழைப்பு விடுக்கும் 5 அம்ச பிரகடனம் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:-

* நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் பொதுவான, ஆக்கப்பூர்வமான திட்டத்தின் அடிப்படையில் ஒரே சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட தயார்.

* கர்நாடகம், சத்தீஸ்கார், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் தலைவர்களும், தொண்டர்களும் ஒழுங்குடனும், ஒற்றுமையுடனும் பாடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள், அடுத்த மக்களவை தேர்தலுக்கு முக்கிய பாதையை அமைக்கும்.

* பா.ஜ.க.வுடனும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும், அவற்றின் இழிவான அரசியலுடனும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

* பா.ஜ.க.வின் எதேச்சதிகார, வகுப்புவாத, கூட்டு முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக நாங்கள் எங்கள் அரசியல் விழுமியங்களைப் பாதுகாக்க எப்போதும் போராடுவோம். இவ்வாறு பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் பெற்ற சக்தியை முன்னெடுத்துச்செல்வதற்கு கட்சி ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும். அதில் ஒட்டுமொத்த நாட்டுடன் நானும் பங்கேற்பேன்” என கூறியதற்கு ஒரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் தெற்கே உள்ள கன்னியாகுமரியில் இருந்து வடக்கில் இருக்கும் காஷ்மீர் நோக்கி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டதைப்போல, வடகிழக்கையும், மேற்கையும் இணைக்கிற வகையில், பசிகாட்டில் இருந்து (அருணாசலபிரதேசம்) போர்பந்தர் நோக்கி (குஜராத்) ஒரு யாத்திரை மேற்கொள்ள பரிசீலித்து முடிவு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் ஏறத்தாழ 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையால் கட்சித்தொண்டர்களுக்கு புதிய ஊக்கமும், சக்தியும் கிடைத்துள்ளது. அடுத்து வடகிழக்கில் இருந்து மேற்கு நோக்கி, பசிகாட்டில் இருந்து (அருணாசலபிரதேசம்) போர்பந்தர் நோக்கி (குஜராத்) ஒரு யாத்திரை மேற்கொள்ள பரிசீலித்து முடிவு எடுக்கப்படுகிறது. இது இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். இந்த யாத்திரைக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை போன்று விரிவான கட்டமைப்பு வசதி தேவைப்படாது. அதை விட குறைவான எண்ணிக்கையிலான தொண்டர்களை கொண்டு நடத்தப்படும். இது பெரும்பாலும் பாதயாத்திரையாக இருக்கும். ஆனால் இந்தத் தடத்தில் நிறைய காடுகள், ஆறுகள் உள்ளன. எனவே இதற்கு ஏற்றவாறு இது பலவழி யாத்திரையாக இருக்கும். இது இந்திய ஒற்றுமை யாத்திரையை விட குறைவான காலத்துக்கு நடைபெறும். இந்த யாத்திரை ஜூன் மாதத்துக்கு முன்பாகவோ அல்லது நவம்பர் மாதத்துக்கு முன்பாகவோ நடத்தப்படும். அடுத்த சில வாரங்களில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.