அண்டை நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 1990களின் நடுப்பகுதியில் இருந்து ரஷ்யா நாட்டிற்கு வெளியே இத்தகைய ஆயுதங்களை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறையாகும்.
அண்டை நாடான பெலாரஸுடன் ரஷ்யா தனது பிராந்தியத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளது என்று விளாடிமிர் புடின் கூறினார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “இங்கும் அசாதாரணமானது எதுவுமில்லை: முதலாவதாக, அமெரிக்கா பல தசாப்தங்களாக இதைச் செய்து வருகிறது. அவர்கள் தங்கள் தந்திரோபாய அணு ஆயுதங்களை தங்கள் நட்பு நாடுகளின் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலைநிறுத்தியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடை குறித்த நமது சர்வதேச கடமைகளை மீறாமல் ஆயுதங்கள் பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று புடின் கூறினார். ஆயுதங்கள் பெலாரஸுக்கு எப்போது மாற்றப்படும் என்பதை புடின் குறிப்பிடவில்லை. “தந்திரோபாய” அணு ஆயுதங்கள் என்பது போர்க்களத்தில் குறிப்பிட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைக் குறிக்கும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 396-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அண்டை மற்றும் ஐரோப்பிய நட்பு நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது. ரஷ்யா, உக்ரைன், போலாந்து, லிதுவேனியா, லடிவா ஆகிய நாடுகளை பெலாரஸ் எல்லையாக கொண்டுள்ளது. பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவியபோதும் அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்யாவிடமே இருக்கும் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அதேவேளை, 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனிநாடுகளானதால் அங்கிருந்து 1996ம் ஆண்டுக்குள் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப் பெற்றுக்கொண்டது. தற்போது பல ஆண்டுகள் கழித்து வெறொரு நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவும் நிகழ்வு உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவை விட அதிக அணு ஆயுதங்களை ரஷ்யா வைத்திருப்பதால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பீதியில் உள்ளன. மேலும் பெலாரஸ் மேற்கத்திய நாடுகளுக்கு அருகில் இருப்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மேற்கத்திய நட்பு நாடுகள் அதிக இராணுவ ஆதரவை அனுப்பும் வரை ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதலை தொடங்க முடியாது என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் இல்லாமல் தனது படைகளை முன்வரிசைக்கு அனுப்ப மாட்டேன் என்று ஜப்பானிய செய்தித்தாளிடம் அவர் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.