ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை: எல்.முருகன்

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் ஒரு மாத காலமாக கடந்த டிசம்பர் வரை காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம், காசிக்கும், ராமேசுவரத்துக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் தென்காசிக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் காசியுடன் தொடர்புடையவை. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான காசியில் ஒரு மாதம் முழுவதும் காசி தமிழ் சங்கமம் நடந்தது. இதில், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், ஆடைகள், உணவு பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் போன்றவற்றை எடுத்துக்கூறும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக சவுராஷ்டிரா தமிழ் சங்கம் சார்பில் இன்னும் சில நாட்களில் குஜராத்தில் சவுராஷ்டிரா சங்கமம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த மக்கள் அங்கு செல்ல இருக்கின்றனர்.

இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையேயான பிரச்சினைகளை கண்காணித்து வருகிறோம். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ராகுல்காந்தி விவகாரத்தை பொறுத்தவரை அவர் மீது எங்களுக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவ்வாறு கூறுவது தவறானது. கோர்ட்டுதான் அவருக்கு தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா-அ.தி.மு.க. உறவில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சவுராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சவுராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிரா சமூக மக்கள் குஜராத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதிகளில் பிரிந்துள்ள அந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்களது பூர்வீகமான குஜராத்துக்கு அழைத்துச் செல்லவும், அதேபோல் அங்குள்ள மக்களுக்கு தமிழகத்தின் பழக்க, வழக்கங்கள் கலாசாரத்தையும் தெரிந்துகொள்ளும் வகையில், குஜராத்தில் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தேர்தலை மையப்படுத்தி பா.ஜனதா எந்தப் பணிகளையும் செய்வது கிடையாது. நாட்டு மக்களுக்காக தன்னலம் கருதாமல் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில அமைச்சர்கள் ருஷிகேஷ் பாய் பட்டேல், பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட 8 அமைச்சர்கள் மற்றும் குஜராத் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நடத்திய நிகழ்ச்சியிலும் எல்.முருகன் பங்கேற்று, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.