ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி எனக் கூறி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உட்பட, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
கள்ளம் கபடம் இல்லாத நபராக ராகுல் காந்தி உள்ளார். அதுதான் பிரச்சனை. ராகுல் காந்தி பேசும்போது மோடி அடிக்கடி தண்ணீர் குடித்தார். அவரது கைகள் நடுங்கின. பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக மான நாஷ்ட வழக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இது தான் இந்தியாவில் முதல் முறை. எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்துள்ளனர். பொது மேடையில் பேசியதற்கு மான நாஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாருமே பொது மேடையில் பேச முடியாது. இந்த விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்.
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்யப் போகிறோம்? நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம். பொதுக்கூட்டத்தில் பேசிய சாதாரண பேச்சிற்காக திட்ட மிட்டு பேசியதாக கூறி இது போன்ற ஒரு அவதூறு வழக்கு போடப்பட்டு பதவியை பறித்துள்ளனர். அதுவும் பேசியது கர்நாடகாவில்.. ஆனால் வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது போன்ற வெறி உணர்ச்சியால் எம்.பி பதவியை பறிப்பது ஜனநாயகம் விரோதம். இதுபோன்ற ஜனநாயக விரோதத்தை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி அகிம்சை வழியிலேயே போராடி பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றினார். அதுபோல காங்கிரஸின் இந்த அறவழிப்போராட்டம் மோடியை வெளியேற்றும். அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் அதையே பாவம் என்று கூறுகிறார்கள். அகிம்சை போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டிய அவசியம் என்ன? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாட்டில் இது போன்று செய்யக்கூடாது. இது சர்வாதிகாரத்தின் உச்சம். இவ்வாறு அவர் பேசினார்.