2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப் பெரும் மதமோதல்களை உருவாக்கியது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் 1,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் மத வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிமன்றம் பிரதமர் மோடியை விடுவித்தது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மதவெறியாட்டங்கள் தொடர்பாக பல வழக்கு விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. இதில் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும் அடங்கும்.
கலோல், டிலோஸ் பகுதிகளில் முஸ்லிம் பெண்கள பலாத்காரம் செய்தது, சிறுபான்மையினரை படுகொலை செய்தது உள்ளிட்டவை தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த சம்பவங்களில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 194 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 334 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் வழக்கை விசாரித்த ஹலோல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லீலாபாய், குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு எதிரான ஆவணங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என கூறி மொத்தமாக விடுதலை செய்தார். இவ்வழக்கில் மொத்தம் 39 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஆனால் 13 பேர் வழக்கு விசாரணையின் போது மரணம் அடைந்துவிட்டனர். குஜராத் படுகொலை தொடர்பான பல வழக்குகளில் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.