அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்!

இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின்அருணாச்சலப் பிரதேசத்தை நீண்ட நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அம்மாநிலத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை சீனா எடுத்த போதிலும், இந்தியாவிடம் அவை எடுபடவில்லை. இந்த சூழலில்தான், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் படையினரை இந்திய ராணுவ வீரர்கள் துரத்தியடித்தனர். இந்த மோதலில் சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். லடாக்கில் பெற்ற அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாருக்குள் 300-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் உருட்டுக்கட்டை, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். ஆனால், வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் சேர்ந்து 300 சீனப் படையினரை வெறும் கைகளாலேயே அடித்து விரட்டினர். உலக வல்லரசு என சொல்லிக்கொள்ளும் சீனா, இந்திய ராணுவ வீரர்களிடம் அடிபட்டு திரும்பியதை மேற்கத்திய ஊடகங்கள் எள்ளி நகையாடின. இதனை தனக்கு நேர்ந்த சர்வதேச அவமானமாக சீனா கருதுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, இந்திய எல்லையை ஒட்டிய பகுதி நெடுகிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. இதனால் இந்தியாவும் சீன எல்லையில் படை பலத்தையும், ஆயுத தளவாடங்களையும் பெருக்கி இருக்கிறது. இந்த சூழலில்தான், தற்போது மீண்டும் சேட்டையை காட்ட தொடங்கியிருக்கிறது சீனா. அதன்படி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீன அரசாங்கம் தனது ‘மேன்டேரின்’ (Mandarin) மொழியில் நேற்று அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்து அறிவிப்பை வெளியிட்டது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அதே சமயத்தில், இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் கூடுதலான ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய – சீன எல்லையில் பதற்றமான சூழலும் காணப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில், “சீனாவின் தகவல்களை நாம் பார்த்து வருகிறோம். சீனா இவ்வாறு செய்வது முதல் முறை கிடையாது. நாங்கள் இதை நிராகரிக்கிறோம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. இதனை பிரிக்க முடியாது. கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை கொண்டு இந்த உண்மையை மாற்ற முடியாது” என்றார்.