ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு தமிழகம், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய வகை வைரசான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபுதான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதார நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது திரையரங்கு, கூட்ட அரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல ஏறுமுகம் அடைந்து இருப்பது மக்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21,179 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 71-வயதான அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசோக் கெலாட் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணிகளை தொடருவேன். அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதேபோல், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பாஜகவை சேர்ந்தவருமான வசுந்தராஜே சிந்தியாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.