அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது!

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றத்தில் வைத்து டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு முறைகள் முடிந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது. அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் டிரம்பிற்கு எதிரான arraignment எனப்படும் முறையான குற்றச்சாட்டு பதிவுக்காக அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டிரம்பை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். டிரம்பிற்கு எதிராக 34 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. தான் அப்பாவி என்றும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று டிரம்ப் மறுத்தார். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் புறப்பட்டு சென்றார்.

பாலியல் உறவில் இருந்த பெண்ணுக்கு குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக வழக்கறிஞர் கூறியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் டவர் டோர்மேனுக்கு 30,000 டாலர் வழங்கியது, டிரம்புடன் பாலியல் உறவில் இருந்த பெண்ணுக்கு 1,50,000 டாலர் கொடுத்தது மற்றும் மூன்றாவதாக ஆபாச பட நடிகைக்கு 1,30,000 டாலர் கொடுத்தது ஆகிய புகார்களில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பிற்கு எதிரான வழக்கு விசாரணையை ஜனவரி 2024ல் தொடங்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் டொனால்டு டிரம்பிற்கு இந்த வழக்கு விசாரணை கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது