கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவ கழகம் தயாரித்துள்ள 6 அழகு சாதன பொருட்கள் இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அளவில் கொரானா அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது கடந்த 24 மணி நேரத்தில் 198 ஆக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னால் ஓர் இலக்கத்தில் தொற்று பதிவாகியிருந்தது. தற்போது 198 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வைரஸை போலவோ, டெல்டா பிளஸ் வைரஸை போலவோ மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இல்லை. தற்போது தனி மனிதர்களுக்கு பரவி வருகிறது. கிளஸ்டர் பாதிப்பாக இல்லை. நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் அதிகளவில் பாதிப்பு பரவ வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மருத்துவமனைகளில் முக கவசம் அணிவதை கடைபிடிக்க கூறியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 11 ஆயிரத்து 333 அரசு மருத்துவ நிர்வாகங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளோம்.

ஒன்றிய அரசிடமிரிந்து சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் தற்காத்துக் கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. கிளஸ்டர் பாதிப்பு இல்லை என்பதால் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்து அணியாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கொரோனா தொடங்கிய போது அறிவித்த முக்ககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அறிவுறுத்தல்கள் தொடார்ந்து அமலில் தான் உள்ளன.
பாதுகாப்பு அவசியம் கருதி மக்கள் எப்போதும் முகக் கவசம் அணிந்தால் தவறில்லை. பெரிய அளவில் பதற்றம் வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். நான்கு ஐந்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.