விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: செந்தில்பாலாஜி

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 11வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை கேள்வி நேரத்தின் போது பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையும், தொகுதி பிரச்சனைகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். அந்த வகையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேர மும்முனை மின்சாரமாக வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும், ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் அருகாமை நிலத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதால் அதற்கு கட்டணம் கட்டுவதற்கும் அவர்கள் தயாராக உள்ளதாகவும் ஆகையால் இது குறித்தும் அரசு பரிசீலிக்குமா என செந்தில்நாதன் வினவினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் உத்தரவு என்றும், தற்போது மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.இந்தப் பணிகள் விரைவில் முடியும் என நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதன் பிறகு விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற உறுதியை அளித்தார்.