மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் துணை முதலமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. அமலாக்கத்துறையின் காவல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ தொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மணீஷ் சிசோடியா. ஆனால். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த மார்ச் 9ஆம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன் சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலையும் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.