சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் மனு அபத்தமானது; ஆபத்தானது என கூறி உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை மத்திய பாஜக அரசின் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது எதிர்க்கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டு. ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, திமுக உட்பட 14 எதிர்க்கட்சிகளின் சார்பாக பொதுநலன் வழக்கை தாக்கல் செய்தார். அதில், 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவிக்கு வந்த காலம் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மிதான சிபிஐ, அமலாக்கப் பிரிவின் வழக்குகள் மிக அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இத்தகைய வழக்குகள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது என அபிஷேக்சிங் மனு சிங்வி சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 95% எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதானதுதான்; இந்த வழக்குகளில் வெறும் 23% பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான் எனவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்தார். அப்போது, சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணைகளில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விதி விலக்கு தர வேண்டும் என்பதுதான் மனுதாரரின் கோரிக்கையா? என சந்தேகம் எழுப்பினார் தலைமை நீதிபதி. இதனை நிராகரித்த அபிஷேக் மனு சிங்வி, எந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாதுகாப்பு கேட்கவோ, பாதுகாப்பு தர வேண்டும் என்றோ இந்த வழக்கு தொடரப்படவில்லை. மத்திய அரசானது விசாரணை ஏஜென்சிகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. இதனால் ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுகிறது என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. அத்துடன், சிபிஐ- அமலாக்கப் பிரிவு தொடரும் பல வழக்குகள் எந்த ஒரு ஆதாரமுமே இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமாகவும் இருக்கிறது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்றார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், இத்தகைய மனுக்கள் அரசியல்வாதிகளுக்கு அவசியமானதாக இருக்கலாம். பொதுமக்களுக்கு நலன் தரக் கூடியதோ அல்லது உரிமைகளைப் பாதிக்கக் கூடியதோ அல்ல. உச்சநீதிமன்றத்தின் முன் இத்தகைய வழக்குகள் வரும் போது நீதித்துறை கடமையை செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில்தான் எழுப்ப முடியும் என்றார். இதனால் 14 எதிர்க்கட்சிகளின் மனுவை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். இதனையடுத்து தமது மனுவை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்ட அபிஷேக் மனு சிங்வி, பாதிக்கப்பட்டோர் விவரங்கள், வழக்குகளுடன் புதிய வழக்கு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தனிநபர்கள் யாராக இருந்தாலும், சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். ஆனால் தனிப்பட்ட வழக்குகளின் உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொதுவான வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.