ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிவிட்டார்கள் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர். பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.