கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலையில் பெங்களூரில் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசி சீட் ஒதுக்க கோரிக்கை வைத்தனர்.
கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி உள்ளது. இதுதவிர அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, எஸ்டிபிஐ, மாயாவதியின் பகுஜன் சமாஜ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ், கர்நாடகா முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டியின் கட்சி உள்பட வெவ்வேறு கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுகவும் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூர் காந்தி நகர் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. இதனால் தான் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்புகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பாஜகவிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழர்கள் அதிகமுள்ள பகுதியில் 3 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது
இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வம் தரப்பும் விரைவில் பாஜக தலைவர்களை சந்தித்து தங்களுக்கும் சீட் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று பெங்களூரில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜகவின் முகமாகவும் இருக்கும் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வம் அணியினர் சந்தித்து பேசினர். ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் எடியூரப்பாவை இன்று சந்தித்து பேசினர். அப்போது கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக அதிமுகவை கைப்பற்றியுள்ளார். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் எட்டிப்பிடித்துள்ளார். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் எட்பபாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே இருந்த போட்டி தற்போதைய நிலையில் கர்நாடகாவுக்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் தான் எடியூரப்பா உடனான சந்திப்பு குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
நான் நீண்டகாலமாக அதிமுகவில் கர்நாடகா மாநில செயலாளராக இருந்தேன். ஓ பன்னீர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தேன். இவர் பாஜகவின் 11 பேர் கொண்ட நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜகவின் வெற்றிக்காக அதிமுக பணியாற்றி உள்ளது. எடியூரப்பாவின் சிவமொக்கா தொகுதியிலும் அதிமுக பணியாற்றி இருக்கிறது. அதை ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட கூறினார். அதைக்கூறி பாஜக கூட்டணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறினோம்.
கடந்த காலத்தில் பெங்களூரில் திருவள்ளூவர் சிலை திறந்தது, தமிழ் சங்கத்துக்கு நிதி ஒதுக்கியது, ஜெயலலிதாவின் நினைவஞ்சலியை நடத்தினோம். இதில் 2 மணிநேரம் பங்கேற்று எடியூரப்பா பேசினார். இப்படிப்பட்ட தொடர்பு எங்களுக்கும் எடியூரப்பாவுக்கும் உள்ளது. நாங்கள் கூறியவற்றை விபரமாக கேட்டார். டெல்லியிலும் பேசுவதாக கூறியுள்ளார். பாஜக முடிவுக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. அதேபோல் கர்நாடகாவில் பாஜக எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை. எப்போதும் நாங்கள் சோர்ந்து போனது இல்லை. தமிழகத்தில் அரசியல் செய்தாலும் கூட கர்நாடகாவில் நாங்கள் திறம்பட செயல்பட்டு உள்ளோம். இதுபற்றி அடுத்தக்கட்டமாக ஓ பன்னீர் செல்வத்துடன் பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.