பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு பாஜக தொண்டருடன் செல்பி!

பிரதமர் நரேந்திர மோடி, ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவரோடு செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை சிறப்புமிக்க செல்பி என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வருகை தந்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தெலுங்கானாவிற்கு சென்றார். அவரை வரவேற்க அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வருகை தராமல் புறக்கணித்த நிலையில், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர். அதன் பின்னர் சென்னை வந்த வந்த விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் அரசு முறை வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து சென்னை பல்லாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஈரோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவரோடு செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை சிறப்புமிக்க செல்பி என்று தமிழில் குறிப்பிட்டு இவரை போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தான் இருப்பதை பெருமையாக உணர்வதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், “ஒரு சிறப்பு செல்ஃபி.. சென்னையில் திரு எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாரதிய ஜனதா கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் – அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார். திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.