தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம்: தைவான்

சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன.

ஒன்றுபட்ட சீனாவின் ஒரு அங்கமாக தைவான் கருதப்படுகிறது. உலக நாடுகள் பல மற்றும் ஐநா உள்ளிட்ட அமைப்புகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்கா சமீப நாட்களாக இந்த கருத்திலிருந்து விலகியுள்ளது. அதாவது தைவான் ஒரு சுதந்திர ஜனநாயக நாடு என்று கூறி வருகிறது. எனவே அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தன்னிச்சையாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படிதான் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் வந்திருந்தார். இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் தைவானை சுற்றியுள்ள தீவில் சீன ராணுவத்தின் விமான படை குண்டுகளை வீசி போர் பயிற்சி மேற்கொண்டது. எனவே கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் சீனா போரில் இறங்கவில்லை.

இதனையடுத்து தற்போது தைவானை நிர்வகித்து வரும் டிசாய் இங்-வென் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் ஒரு அங்கமாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவரும், குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கெவின் மெக்கார்த்தியை சந்திக்கவும் முடிவெடுத்தார். இது மீண்டும் போர் குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ஏனெனில் மேற்குறிப்பிட்டதைப் போல சீனாவின் ஒரு அங்கமாக இருக்கும் தைவானை தூண்டிவிட அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் டிசாய் இங்-வென் – கெவின் மெக்கார்த்தி சந்திப்பு. சீனா மட்டுமல்லாது தைவானில் உள்ள 50 கட்சிகள் மற்றும் அமைப்புகள் சீனாவுடன் தைவான் இருக்க வேண்டும் என்று வலிறுத்தி போராட்டங்கள் நடத்த தொடங்கியுள்ளன. எனவே சீனாவும் தனது பங்குக்கு போர்க்கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை தைவான் தீவை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி சுமார் 9 சீன போர்க்கப்பல்கள் மற்றும் 48 ஜெட் விமானங்கள் தைவானை சுற்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களும், விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது என்று சீன ஊடகங்கள் கூறியிருக்கிறது. இதில் J-18 (Jianjiji-18) எனும் போர் விமானத்தை சீனா பயன்படுத்தியுள்ளது. இந்த வகை விமானங்கள் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். அதேபோல இது பறப்பதற்கு மிக குறைந்த தொலைவிலான ஓடு பாதை இருந்தாலே போதுமானதாகும். மேலும், தரையிறங்கும்போது இது செங்குத்தாக ஹெலிகாப்டர் போன்று தரையிறக்கும். அமெரிக்காவின் நவீன போர் விமானங்களுக்கே இது சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தைவான் ஜலசந்தியின் மையப்பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தைவான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், தைவான் எங்களது தாய்வீடு. இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்துள்ளது. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டைப் பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.