அந்தமான் நிகோபார் தீவுகளில் 6வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதன் பின்னணியில் புவி வெப்பமடைதல், பருவநிலை மாறுபாடுகள், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் செயற்கை பேரிடர்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. நிலநடுக்க பாதிப்புகளின் பட்டியலில் லேட்டஸ்ட் வரவாக சேர்ந்திருப்பது அந்தமான் நிகோபார் தீவுகள்.
நேற்று பிற்பகலில் 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதிக்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் அந்தமான் நிகோபார் தீவுகளின் கேம்பெல் பே என்ற இடத்தில் 220 கிலோமீட்டர் தொலைவில் வடக்கே பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சுமார் 250 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அதிர்வுகள் வெளிப்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது. இதனை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்க பாதிப்புகள் உணரப்பட்ட நிலையில் அதையொட்டி உள்ள இந்தியப் பகுதிகளில் அச்சம் ஏற்பட்டது. ஆனால் அவ்வாறான பாதிப்புகள் ஏதும் உண்டாகவில்லை. அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகிறது. ஏற்கனவே இயற்கை சீற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், மேம்பாடு என்ற பெயரில் வளர்ச்சி திட்டம் ஒன்றிற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது அந்த தீவுகளின் உயிர் பன்மையை அழிக்கும் வகையிலான திட்டம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் மறு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயற்கை வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.