ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் கடந்த 2-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர் நொய்டாவைச் சேர்ந்த ஷாருக் ஷபி (வயது 24) என தெரியவந்தது. அவர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மகாராஷ்டிரா அதிரடி படையினர் பிடித்து கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரள போலீசார் ஷாருக் ஷபியை கோழிக்கோடு அழைத்து வந்தனர். இங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் ரெயிலில் பயணிகள் மீது தீவைக்க அவரது நண்பர் ஒருவர் கூறியதாக தெரிவித்தார். பின்னர் அதனை மறுத்தார். அவர் மாற்றி, மாற்றி கூறியது குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தினர். இதில் ஷாருக் ஷபி பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அவருக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த பல பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் உள்ளது. அதனை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் ஷாருக் ஷபி மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. அவருடன் நிச்சயமாக வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கும். அந்த நபர்களை கண்டுபிடித்தால், இதன் பின்னணி தெரியவரும். எனவே இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ.க்கு மாறும், என்றார். ரெயில் எரிப்பு மற்றும் 3 பயணிகள் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் மேலும் பல பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.