அதிமுக சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக திருச்சி மாநாடு அமையும். எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சியில் வருகிற 24-ந் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி பிரீஸ் ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கொள்கைபரப்பு செயலாளர்கள் புகழேந்தி, மருதுஅழகுராஜ், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
சட்டப்படி எங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபிப்போம். வருகிற 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும். எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும். சட்டப்போராட்டத்தில் உறுதியாக 1½ கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள். எம்.ஜி.ஆர்.காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை நடத்துவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் பயணிப்போம். 1½ கோடி தொண்டர்களின் குரலாக நாங்கள் ஒலிக்கிறோம். தொண்டர்கள் நினைத்தால் எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். தமிழக அரசின் செயல்பாடு குறித்து இந்த மாநாட்டில் கருத்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.