பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலாசேத்ரா நடனக் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா நடனக் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அங்கு படித்த முன்னாள் மாணவி ஒருவர் பரபரப்பான பாலியல் புகார் கொடுத்தார். சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 13-ந்தேதி (நாளை) வரை அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஹரிபத்மன் சார்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அவரை ஜாமீனில் விட போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை ஜாமீனில் விட்டால், சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்று ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் கலாசேத்ரா நடனக் கல்லூரியில் தேசிய, மாநில மகளிர் ஆணையங்களின் சார்பில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகளும் கலாசேத்ரா கல்லூரிக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் கலாசேத்ரா கல்லூரியில் படித்த ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவரும் தான் படிக்கும் போது பாலியல் தொல்லையை சந்திக்க நேர்ந்ததாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக போலீசுக்கு புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.