ஆப்கானிஸ்தானில் பெண் சுதந்திரத்தை முற்றிலும் ஒழித்தே தீருவது என கங்கனம் கட்டி சுற்றும் தலிபான்கள், தற்போது பெண்கள் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லக்கூடாது என உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அரசு, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்; கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு அனுமதி கிடையாது; தொலைக்காட்சி சேனல்களில் பெண்களை பணியமர்த்தக் கூடாது, பெணகள் வேலைக்கு செல்லக்கூடாது, எந்தக் காரணத்தை கொண்டும் ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் செல்லக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை புகுத்தி பெரும் அராஜகத்தில் தலிபான்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து தலிபான்கள் கூறுகையில், “ஆண்களும், பெண்களும் ஹோட்டல்களிலும், ரெஸ்டாரண்ட்டுகளிலும் அநாகீரமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவேதான், ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் பொதுவெளியில் சந்தித்துக் கொள்வதை தடுக்கவே இந்த ஏற்பாடு” என்றனர்.