ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் ரயில் நிலையத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு அமர்ந்து போராடத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 150க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி, வேலூர், தஞ்சாவூர், கோவில்பட்டி என பல ஊர்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை விருதுநகர் மதுரை சாலையில் உள்ள வி.வி.ஆர். சிலை ரவுண்டானா அருகே காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடினர். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில், மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸார், மகிளா காங்கிரஸார் மற்றும் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ரயில்வே பீடர் சாலை வழியாக ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி இழப்பு செய்ததை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பின், ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் எட்டு பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.