கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகம்: செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 54 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஆண்டாங்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பைப்லைன் விஸ்தரிப்பு பணியை துவக்கி வைத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் காற்றாலை உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின் நுகர்வு வந்துள்ளது. ஏறத்தாழ 40 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மின்சாரம் எந்தவித தடையும் இன்றி சீரான அளவில் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிக மின் நுகர்வு இதுதான். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கும் எவ்வளவு மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் என கணக்கிட்டு, டிசம்பரிலேயே டெண்டர் விடப்பட்டு ரூ.8.50 என ஒரு யூனிட் டெண்டர் மூலமாக நிர்ணயம் செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே டெண்டர் போடாமல் இருந்திருந்தால், எக்ஸ்சேஞ்சில் யூனிட் ரூ.12க்கு வாங்கியிருக்க வேண்டும். கூடுதல் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்த கோடை காலத்திற்கு மட்டும் முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக ரூ.1,312 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு சேமிப்பு உருவாகியுள்ளது.

முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் சட்டமன்றத்தில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எந்தெந்த கடைகள் என்பதும், பொதுமக்களின் எதிர்ப்பு, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்படுகிறது. மின்வாரியம் சார்ந்த புகார்கள் ஏதும் இருந்தால் மின்னகத்துக்கு 9498794987 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் உடனுக்கு உடன் குறைகள் களையப்படும். கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.