தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைகள் வருகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் மேகக் கூட்டமோ என்று எண்ணும் அளவுக்கு வரலாறு காணாத வகையில் வேதிக்கழிவுகளின் நுரைகள் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருவது பெரும் கவலையளிக்கிறது! ஆற்றில் செல்லும் நுரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வேளாண் விளைநிலங்களில் விழுகின்றன. அதனால் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. தென்பெண்ணை ஆற்றையொட்டிய குடியிருப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் வேதிக்கழிவு நுரைகள் படுகின்றன. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் நகரக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் சட்டவிரோதமாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவது தான் இதற்கு காரணம் ஆகும். காவிரியிலும் இத்தகைய கழிவுகள் கலப்பு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதை கடந்த காலங்களில் கர்நாடக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. காவிரியும், தென்பெண்ணையும் கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையாக மாற்றப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் முறையிட்டு இதை தடுக்க வேண்டும். கழிவுநீர் கலப்பால் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.