குட்கா ஊழல்: முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை விசாரிக்க மத்திய அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யவும் பான்பராக், குட்கா போன்றவைகளை கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மாநில அரசின் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் கிடைத்த தகவலின்படி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவ ராவ் உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராகவும் அப்போது இருந்த முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்குச் சென்றது. அதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். முதல் கட்டமாக சென்னையில் உள்ள உணவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு என மொத்தம் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டசபையிலும் குட்கா முறைகேடு எதிரொலித்தது. இதனையடுத்து குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீதும் சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.