தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.
தமிழ்நாடு வரலாற்றில் சர்ச்சைக்குரிய ஆளுநர்கள் என்று சிலர் இருந்துள்ளனர். தற்போது ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மிகக் குறுகிய காலத்திலேயே சர்ச்சைக்குரிய பல சம்பவங்களை அரங்கேற்றினார். நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்க்கப்பட்டுள்ள அரசின் பணிகளுக்கு முட்டுகட்டை போடுவதா என்று ஆளுநருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. பல பேரின் உயிரைக் குடித்த, பல குடும்பங்களை வீதிக்கு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு அதை தடை செய்ய சட்டம் கொண்டு வர முயற்சிக்கையில் மசோதாவை கிடப்பில் போட்டு தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தார் ஆர்.என்.ரவி என விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் மாளிகை விதியை மீறி நிதியை பயன்படுத்தியதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் கூறினார். இந்த இரு சம்பவங்களுக்குப் பிறகு உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் ரவி.
தற்போது ஆளுநர் ராமநாதபுரம் சென்று முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த செல்லவுள்ளது கவனம் பெற்றுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள்கள் பயணமாக இன்று (ஏப்ரல் 18) ராமநாதபுரம் செல்கிறார். இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். 12.30 மணி முதல் 1 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.40 மணி முதல் 5.30 மணி முதல் தேவிபட்டினம், நவக்கிரக கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து 5.30 மணி முதல் 6 மணி வரை மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
நாளை ஏப்ரல் 19ஆம் தேதி காலை உத்தரகோசமங்கை கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். மாலை, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திலும், கமுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.