பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழில் வந்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக 40 லட்சம் நிதி ஒதுக்குவதாக, அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விட்டு, நிதி ஒதுக்காமல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு

பட்டியல் சமூக மக்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதே கீழவீதி பகுதியில் இருக்கும் மற்றொரு அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும்போது, ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் போலி சமூக நீதி பேசித் திரிகிறது திமுக.

பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல், ஆசிரியர்களுக்கான ஊதியமும் வழங்காமல், ‘வேண்டுமென்றே பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக’ என்றே கருத வேண்டியிருக்கிறது.

உடனடியாக தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் தமிழக பாஜக தயங்காது எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.