சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, சபரிமலையில் விமான சேவையும் தொடங்கப்பட உள்ளது.
சபரிமலை அருகே கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் 2,250 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,000கோடியில் விமான நிலையம் கட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின்பல்வேறு துறைகளிடம் கேரள அரசு தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறை ஏற்கெனவே முதல்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறையும் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சபரிமலை அருகே புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,000 கோடி மதிப்பில் 2,250 ஏக்கர் பரப்பில் அரசு, தனியார் பங்களிப்பு திட்டத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும். கேரள அரசின் தொழில் வளர்ச்சி கழகம், விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ‘டேபிள்டாப்’ விமான பாதையை தவிர்க்கவேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இதன்படி, கூடுதலாக 301 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் ஓடுபாதையின் நீளம் 3.4 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.
புதிதாக அமைய உள்ள சபரிமலை விமான நிலையம், மதுரை விமான நிலையம் இடையே உள்ளதொலைவு பற்றி விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டது. சபரிமலை விமான நிலையத்தால் மதுரை விமான நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மாநில அரசு தரப்பில் ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை விமான நிலையத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இதர துறைகளும் அடுத்தடுத்து அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போதைய நிலையில் கேரள தொழில் வளர்ச்சி கழகம் முதல்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இதன்படி விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். விமான நிலைய கட்டுமான பணிக்காக ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். எருமேலி தெற்கில் அமைந்துள்ள செருவள்ளி எஸ்டேட், மணிமலா பகுதிகளில் 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு தரப்பில் ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் 307 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சுமுக தீர்வை எட்ட அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சபரிமலையில் புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் கேரளாவின் 5-வது விமான நிலையம் ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து 138 கி.மீ., கொச்சியில் இருந்து 113 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. புதிய விமான நிலையத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த விமான நிலையத்தால் பக்தர்கள் மட்டுமன்றி பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் தமிழக எல்லை பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள். குமரகம், மூணாறு, வாகமன், தேக்கடி போன்ற சுற்றுலாதலங்களும் வளர்ச்சி அடையும். தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சபரிமலை விமான நிலையம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி’ என்று தெரிவித்துள்ளார்.