உத்தரகோசமங்கை கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்!

உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ளார். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமையன்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றடைந்த அவர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். காலையில் மண்டபம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ரவி மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார். பின்னர் எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்றைய தினம் உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில். இத்தலமே உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இத்திருத்தலத்தினை தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம். ராமாயணக் காலத்தில் இந்த கோயில் இருந்ததற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது. ராமாயணக் காலத்தில் இந்த கோயில் இருந்ததற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும் சுவாமி மூலஸ்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம். மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம் என பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில். நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் என போற்றப்படுகிறது. பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தில் இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும், மாலையில் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், சென்று அஞ்சலி செலுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். ஆளுநர் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.