காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்த சம்பவங்கள் நடந்ததுண்டு. ஆனால் வழுக்கி விழுந்து பற்கள் உடைந்த சம்பவத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்படுபவர்களை கட்டிங் பிளேயரால் பற்களை பிடுங்குவது, வாய்க்குள் ஜல்லி கற்களை கொட்டி பல்லை உடைப்பது, அவர்களின் விதைப்பையை நசுக்குவது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் தற்போது சஸ்பெண்ட செய்யப்பட்டு இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபர் பேட்டி அளித்த பின்பே இந்த விவகாரம் பூதாகரமானது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அஞ்சினர். வீட்டுக்குச் சென்று போலீசார் மிரட்டியதே அதற்கு காரணம். இந்தப் புகார் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்திவருகிறார். இதுவரை இரண்டு கட்டமாக நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

இந்த அமுதா ஐஏஎஸ் விசாரணையின்போது தான் சூர்யா, “கீழே விழுந்ததில் என் பற்கள் உடைந்துவிட்டன” எனப் பிறழ் சாட்சியம் அளித்தார். ஆனால் நேற்று விசாரணை அதிகாரி முன் சாட்சியம் அளித்த சூர்யாவின் தாத்தா, ‘‘போலீசார் தான் என் பேரனின் பற்களை பிடுங்கிவிட்டார்கள். வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என போலீசார் மிரட்டியதாலே சூர்யா பொய் சாட்சியம் அளித்தான்’’ என்றார்.

அதேபோல் பொய் சாட்சியம் அளித்தது குறித்து சூர்யா கூறும்போது, ‘‘நான் இந்த விஷயத்த வெளிய சொன்னதும் பெரிய பிரச்சனையாகிடுச்சு. இதபத்தி விசாரிக்க அதிகாரியை போட்டதும், என்னைத் தேடி போலீஸ் வந்துட்டாங்க. 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து, நான் கீழே விழுந்து பல்லை உடைச்சுக்கிட்டேன்னு சொல்ல வச்சு வீடியோ எடுத்தாங்க. முதல்ல விசாரணை பண்ண சப்கலெக்டர்ட எதுவும் சொல்லக் கூடாதுனு மிரட்டினாங்க. மீறி சொன்னால் வழக்கு போட்டு சிறையில் அடச்சிடுவோம்னு மிரட்டினாங்க. எனக்கு என்ன செய்ரதுனே தெரியல. தேவை இல்லாத வம்பு எதுக்குனு கீழே விழுந்ததால பல்லு உடைச்சிறுச்சுனு பொய் சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பல்வீர் சிங் மீது IPC 506(1), IPC 324 மற்றும் IPC 326 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வீர் சிங்கின் கொடூர நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தசூழலில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.