‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் வெடித்துச் சிதறியது.
உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ‘ஸ்டார் லிங்க்’ செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட்டிற்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகப் பெரிய ராக்கெட் ஆகும். இதனால் இதன் டெஸ்டிங் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்க மெக்சிகோ எல்லையில் நடந்த இந்த ராக்கெட் சோதனையைக் காண அதிகப்படியான மக்கள் நேரிலேயே குவிந்திருந்தனர். இருப்பினும், திட்டமிட்டபடி இந்த ராக்கெட் சோதனை நடைபெறவில்லை. ராக்கெட் கிளம்பிய சில நொடிகளிலேயே பூஸ்டர் தனியாகப் பிரிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதன்மூலம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டின் சோதனை தோல்வியில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
வரும் காலத்தில் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை நடத்த இந்த ராக்கெட் பயன்படும் என்றே கருதப்பட்டது. சந்திரனுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்களை அழைத்துச் செல்லும் இலக்கை கொண்டே இந்த மிகப்பெரிய மற்றும் வலிமையான ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 400 அடி (120 மீட்டர்) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான ராக்கெட்டாக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் உள்ளது. துருப்பிடிக்காத எஃகு மூலம் கட்டப்பட்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் மொத்தம் 33 இன்ஜென்களை கொண்டது. 16.7 மில்லியன் பவுண்டுகள் உந்தும் திறனைக் கொண்டுள்ளது. மீத்தேன்-எரிபொருளைக் கொண்ட, முதல்-நிலை எஞ்சின்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் ஜனவரியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அது நன்றாகவே இருந்தது. இதுவரை வடிவமைக்கப்பட்ட ராக்கெட்களில் மிகவும் வலிமையான ஒன்றாக ஸ்டார்ஷிப் ராக்கெட் இருக்கிறது. இந்த ஸ்டார்ஷிப் மூலம் 250 டன் எடையைக் கூட தூக்க முடியும். மேலும், செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் போது அதிகபட்சம் 100 பேர் வரை இதில் பயணிக்கலாம். இதன் சாட்டிலைட் பகுதியில் ஆறு என்ஜின்கள் இருக்கிறது. இது 164 அடி (50 மீட்டர்) உயரமாகும்.. வரும் காலங்களில் சாட்டிலைட் அனுப்ப இந்த ராக்கெட்களை பயன்படுத்தவே எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
ஸ்டார்ஷிப் நாசா இதுவரை உருவாக்கிய அனைத்து ராக்கெட்களையும் விட மிக மிக வலிமையானது. நேற்று நடந்த டெஸ்டிங் மொத்தம் 1.30 மணி நேரம் நடக்க இருந்தது. பூமியின் முழு சுற்றுப்பாதையில் சுற்ற இருந்தது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட மூன்று நிமிடங்களில் பூஸ்டர் பிரிந்து மெக்சிகோ வளைகுடாவில் விழ வேண்டும். இதுவே ஒர்ஜினல் திட்டம். ஆனால், திட்டமிட்டபடி பூஸ்டர் பிரியாததால் அதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் அதன் செலவு வெகுவாக குறையும். ஆனால், டெஸ்டிங்கில் அது முற்றிலுமாக தோல்வியடைந்துள்ள நிலையில், அது மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விஞ்ஞானிகள் கூறுகையில், எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை எனவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அடுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.