காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய பாஜ அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு, கடந்த 10 நாட்களுக்கு முன்பாக புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து காஷ்மீரில் இன்சூரன்ஸ் மோசடி விவகாரத்தில் தொடர்பிருப்பதாக சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுவாக பிரதமர் மோடி தன்னை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கச் செய்வதில் மிகவும் அவசரமாக இருப்பார். ஆனால், மாலிக் விஷயத்தில் ஏன் 10 நாட்கள் காத்திருந்தார் என தெரியவில்லை. மாலிக் என்ன தவறு செய்தார்? தேசிய பாதுகாப்பு தொடர்பான சில பொருத்தமான, அவசியமான கேள்விகளைக் கேட்டார். அதற்காக அவரை மவுனமாக்க சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த செய்தி சத்யபால் மாலிக்கிற்கு மட்டும் அல்ல, உண்மைக்காகக் குரல் எழுப்பும் அனைவருக்குமானது. மாலிக்கைப் போல் வாயைத் திறந்தால், சிபிஐ உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் என்று மிரட்டப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.