பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி: விபி துரைசாமி

பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி உறுதி அளித்து இருப்பதாக அவரை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாடு பாஜகவினர் மனு அளித்தனர். அதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுத்து தடயவியல் விசாரணை செய்து இந்த உண்மையை கண்டறிந்து அது அவர் குரல் தானா? அல்லது வேறு ஒருவரின் குரலா? என்று கண்டறியும்படி மாண்புமிகு ஆளுநர் அவர்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டு இருக்கிறது.” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “இந்த ஆடியோ அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது ?” என்று கேட்க விபி துரைசாமி, ஒருமையில், உனக்கு எப்படி கிடைத்ததோ அதேபோல் அவருக்கு கிடைத்தது.” என்றார்.

மற்றொரு செய்தியாளர், “இந்த ஆடியோ விவகாரம் எல்லா மட்டத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. பாஜகவிலும் கடுமையாக வந்துகொண்டு இருந்தது. இப்போது இந்த விவகாரமும் வந்துகொண்டு உள்ளது. இதை உறுதிபடுத்துவது எப்படி?” என்றார்.இதற்கு பதிலளித்த அவர், “அதற்குதான் ஆளுநரிடம் வந்து இருக்கிறோம்.” என்றார்.

மாநில அரசிடம் இதுபற்றி சொல்லி உள்ளீர்களா? முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு, “ஆளுநர்தான் அரசாங்கத்தின் தலைவர். அவரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டோம். நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் சொல்லி இருக்கிறார்.” என்றார்.

பிடிஆர் தான் பேசிய ஆடியோ இல்லை என்றும் தடயவியல் ஆய்வறிக்கை வந்துவிட்டதாகவும் கூறி உள்ளார்? என்று செய்தியாளர் கேட்க, “அதை உறுதிபடுத்ததானே இங்கு வந்து உள்ளோம்.” என்றார். உடனே அமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நீங்கள் இல்லையா? என்று செய்தியாளர் கேட்க, “நாங்கள் குற்றம் சொல்கிறோம். அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கட்டும். அவர் குற்றவாளி என்பதை சட்டப்படி நிரூபிக்கிறோம். அவர் குரல்தான் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்று வெளியிட்டார். மத்திய அரசிடம் எல்லா அதிகாரமும் உள்ளது. நீங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்துவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நீங்கள் வருமானத்தின் மூலதனத்தை காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் அரசின் கஜானாவிற்கு சென்று நண்மையை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் 30 ஆயிரத்தைதான் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதுதானே எங்கள் குற்றச்சாட்டு? ஸ்டாலினையும் பிடிஆரையும் பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை. பிடிஆரும் சபரீசனும் உறவினர். மக்கள் வரிப்பணம் தனி மனிதனிடம் சென்றுவிட்டதே என்பதுதான் எங்கள் கோரிக்கை. சொத்துக்குவிப்பு பட்டியல் விவகாரத்தில்தான் சிபிஐ யை நாடுவோம் என்று அண்ணாமலை பேசினார். இந்த ஆடியோ விவகாரத்துக்காகவே ஆளுநரை சந்திக்க வந்தோம். இது வேறு. அது வேறு” என்றார்.