முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள திட்டம்!

முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, மே 3-ஆவது வாரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக, பல்வேறு நாடுகளில் உள்ள முன்னணி தொழில் துறையினரைச் சந்தித்து முதலீடுகளை ஈா்ப்பதற்கான பணிகளில் முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் ஈடுபடவுள்ளனா். அந்த வகையில், மே மூன்றாவது வாரம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சில வெளிநாடுகளுக்குச் செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. லண்டன், சிங்கப்பூரில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் அவா் கலந்து கொள்வாா் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் துபை சென்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணம் மூலம் ரூ.6,100 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க வகை செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து, நிகழாண்டும் அவா் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்த பயணங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கான பூா்வாங்க பணிகள் வேகமெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.