உப்பள்ளியில் ராகுல்காந்தியை நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பா.ஜனதா உள் விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்த ராகுல் காந்தியை ஜெகதீஷ் ஷெட்டர் வரவேற்றார். முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் எனக்கு காங்கிரசின் பலம் மற்றும் மக்களின் ஆதரவு உள்ளது. அதனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. மத்திய விசாரணை அமைப்புகள் என்னை கண்காணிக்க நான் எந்த சட்டவிரோதமான பணிகளையும் செய்யவில்லை. சமூக விலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள். வீட்டில் அமர்ந்து செய்யப்படும் இந்த பணியால் எனது வெற்றியின் மீது எந்த தாக்கமும் ஏற்படாது. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு உள்ளூர் மக்களின் மனநிலை, இங்குள்ள சூழ்நிலை என்னவென்று தெரியாது. மக்களிடம் இருந்து அவர்களுக்கு ஆற்றும் பணி தான் ஒருவரின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராகுல் காந்தி என்னுடன் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் லிங்காயத் சமூக தலைவர்கள் ஓரங்கட்டப்படுவது மற்றும் அதன் உள் விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஹனகல் நகரில் நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வரும்படி ராகுல் காந்தி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். வட கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யுமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து என்னுடன் ஆலோசித்து சுற்றுப்பயண திட்டத்தை வெளியிடுவதாக கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். உப்பள்ளியிலும் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். காங்கிரசில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் காங்கிரசை சேர்ந்த ஒருவர் போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினர்.